பங்கு எவ்வளவு விலை இறங்கும் - க.கார்த்திக் ராஜா Via Nanayam Vikatan - Dated 05.06.2015

Ref : Nanayam Vikatan Tamil Magazine  Dated 05.06.2015

Question :

ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிா்ப்பாா்ப்பை பூா்த்தி செய்யாதபோது, அந்த நிறுவனத்தின் பங்கு எவ்வளவு விலை இறங்கும் என்பதை எப்படி கண்டுப்படிப்பது?


Answer :

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதன் பங்குகள் சுமார் ஒரு வார காலம் முன்னதாகவோ அல்லது முந்தைய நாளிலிருந்தோ ஏறத் தொடங்கிவிடும். இத்தகைய காலத்தில் அதன் தேவைப்பாடு (Demand) இயல்பு நிலையிலிருந்து சற்று அதிகமாக காணப்படும். அதற்கேற்ப அதன் விலையும் சிறிது சிறிதாக ஏறிக் கொண்டிருக்கும்.
காலாண்டு முடிவுகள் வெளியாகும் நாளன்று அதன் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூா்த்தி செய்யாதபோது தேவை மற்றும் விநியோக (Demand & Supply) அடிப்படையில் இறங்கத் தொடங்கிவிடும். இந்த இறக்கம் என்பது அந்த முடிவுகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் அதன் எதிர்பார்ப்புக்கேற்ப எவ்வளவு விலை ஏறியதோ அதே அளவுக்கு இறங்கவும் வாய்ப்புண்டு. ஒரு வேளை அந்த முடிவுகள் மிக மோசமானதாக இருந்தால் அதன் பாதிப்புத் தன்மைக்கேற்ப பங்கு விலை இன்னும் அதிகமாக கீழிறங்கும் நிலையும் ஏற்படலாம். ஆனால் இந்த விலைச்சரிவு நிலையானதல்ல மற்றும் திடீரென்று ஏற்படும் இந்த விலைச்சரிவை அளவீடு செய்ய துல்லியமான அளவுகோல்களும் கிடையாது.

நீண்டகால முதலீடு செய்பவர்கள் வெறும் காலண்டு முடிவுகளை மட்டும் வைத்து அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை முடிவு செய்வது சரியாக இருக்காது. சுமார் 5 வருட காலத்தின் வருடாந்திர முடிவுகளை (Annual Result) வைத்து ஆராய்ந்த பின்னரே ஒரு நிறுவனத்தின் முழுமையான செயல்திறனை நம்மால் கணிக்க முடியும்.