கமாடிட்டி சந்தைக்குள் நுழைவது எப்படி? அதற்கான அடிப்படை செயல் முறைகளை விளக்கவும்.

Question :

கமாடிட்டி சந்தைக்குள் நுழைவது எப்படி? அதற்கான அடிப்படை செயல் முறைகளை விளக்கவும்.

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட், ரூபிடெஸ்க் கன்சல்டன்சி.

Answer:

“கமாடிட்டி வணிகம் என்பது பங்கு வணிகத்தில் ஃப்யூச்சர்ஸ் டிரேடிங் முறையில் வர்த்தகமாவதை போன்றது. கமாடிட்டி சந்தையில் 200-க்கும் அதிகமான பொருட்கள் வர்த்தகம் ஆகின்றன. நாம் அதிகம் பயன்படுத்தும்  பல பொருட்கள் வணிகத்தில் உள்ளன.
 கமாடிட்டி சந்தையில் முக்கியமாக உலோகங்கள், எரிசக்தி, வேளாண் சம்பந்தப்பட்ட பொருட்கள்  வர்த்தகம் ஆகின்றன. இவற்றின் வரத்து மற்றும் உற்பத்தி போன்ற பல்வேறு விஷயங் களால் உடனுக்குடன் அதிகப்படியான ஏற்றமும் இறக்கமும் ஏற்படும். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவது அவசியம்.
எம்சிஎக்ஸ் சந்தையில் உறுப்பினராக இருக்கும் ஒரு புரோக்கரிடம் கமாடிட்டி அக்கவுன்ட்டை முதலில் தொடங்கிக் கொள்ளவுங்கள். பங்கு வணிகத்தில்  டீமேட் கணக்கைத் தொடங்குவது போன்றே இதற்கும் பான் கார்டு, வீட்டு முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு சான்று தேவை.
இதில் நாம் பங்குச் சந்தையில் ஃப்யூச்சர்ஸ் வணிகத்தில் எப்படி வணிகம் செய்கிறோமோ, அதேபோல மார்ஜின் தொகையை மட்டும் செலுத்தி கமாடிட்டிச் சந்தையில் வணிகமாகும் எந்த ஒருபொருளையும் நாம் வணிகம் செய்யலாம். அதேபோல, எந்த மாத கான்ட்ராக்ட்டின் அடிப்படையில் பொருள் தேவையோ, அதைத் தேர்வு செய்து அந்த மாதம் முடிவு தினம் வரை வைத்துக்கொள்ளலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி போன்ற குறிப்பிட்ட சில கமாடிட்டிகள்  ஒப்பந்த முடிவு தேதிக்கு பின்னர் டெலிவரி எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. அதிக ஏற்ற இறக்கத்தினை தடுக்க கமாடிட்டி சந்தையிலும் சர்க்யூட் பில்ட்டர் உள்ளது.
கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற சில முக்கியமான பொருட்கள் உலகச் சந்தையில் வணிக மாகும் விலையின் அடிப்படையில் இங்கு வணிகம் ஆகின்றன.”

எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் வாங்குவது எப்படி ? டெலிவரி எங்கு கிடைக்கும்?

Question :

எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் வாங்குவது எப்படி ? டெலிவரி எங்கு கிடைக்கும்?

Answer :

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் வாங்குவதற்கு அதில் உறுப்பினராக உள்ள தரகரிடம் (Broker) நீங்கள் கமாடிட்டி டிரேடிங் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். கமாடிட்டி வர்த்தகமாகும் அனைத்து பொருட்களும் கான்ட்ராக்ட் அடிப்படையில் குறிப்பிட்ட மாதத்தின் குறிப்பிட்ட நாளில் காலாவதி (Expiry) ஆகிவிடும். நீங்கள் தங்கத்தை டெலிவரி எடுக்க விரும்பினால் உங்கள் தரகரே (Broker) அதற்கான நடைமுறைகளை மேற்கொள்வார்.
தங்கம் காலாவதியாகும் அந்த குறிப்பிட்ட தேதிக்குமுன் ஒன்றிலிருந்து ஆறு வர்த்தக நாட்கள், ஒப்பந்தம் (Tender) மற்றும் டெலிவரி பருவமாகும் (Delivery Period). இந்த காலத்தில் நீங்கள் ஒப்பந்தம் செய்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.

தங்கம்  டெலிவரி பற்றிய மேலும் சில குறிப்பிட்ட அம்சங்கள்....

·         டெலிவரி மையம் - அஹமதாபாத்

·         995 சுத்தத்தன்மையுடைய பார் (Bar Gold) தங்கமாக கிடைக்கும்.

·         தரச் சான்றிதழ் கிடைக்கும்

·         தங்கம்  டெலிவரி செய்வதினால் ஏற்படும் இதர செலவுகள்    மற்றும் கூடுதல் வரிகள் (Tax) அனைத்தையும் செலுத்த நேரிடும்.

என் டீமேட் கணக்கு ரத்தாகிவிடுமா?

Question :

நான் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பு டீமேட் கணக்கைத் தொடங்கினேன். சூழ்நிலை காரணமாக வர்த்தகத்தில் ஈடுபட முடியவில்லை. என் டீமேட் கணக்கு ரத்தாகிவிடுமா?

Answer :

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

ஒருவர் தனது டீமேட் கணக்கைத் தொடங்கி பல ஆண்டுகள் கழித்தும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம், ரத்தாகாது. மேலும் எவ்வளவு டீமேட் கணக்கு வேண்டுமானாலும் பல்வேறு நிறுவனங்களில் துவக்கி வைத்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் டீமேட் கணக்கை பராமரிக்கும் நிறுவனம் அதன் நிபந்தனைக்களுக்கு உட்பட்டு சில குறிப்பிட்ட காலத்திற்கேற்ப பராமரிப்பு செலவினை உங்களிடமிருந்து வசூலிக்க நேரிடலாம்.